தர்மபுரியில் பயங்கரம்: வாலிபர் குத்திக்கொலை ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
தர்மபுரியில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
தர்மபுரி,
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தர்மபுரி வட்டார வளர்ச்சி காலனியை சேர்ந்தவர் சேகர். இவர் தர்மபுரியில் எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் பிரதீப் (வயது 24). டிப்ளமோ படிப்பை முடித்த இவர் கடையில் விற்பனையை கவனித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது நண்பரான ரமேஷ்குமார் என்ற ஆட்டோ டிரைவரை சந்திக்க தர்மபுரி-பென்னாகரம் சாலையில் உள்ள பைபாஸ் மேம்பாலம் அருகே சென்றார்.
அங்கு ரமேஷ்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் இருந்ததாக கூறப்படுகிறது. நண்பர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருந்தபோது பிரதீப்பிற்கும், ரமேஷ்குமார் உள்ளிட்ட நண்பர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறின்போது ஆத்திரமடைந்த ஒருவர் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரதீப்பின் மார்பில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த பிரதீப் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கே ஓடி வந்தனர். அவர்கள், பிரதீப்பை மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரதீப் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ரமேஷ்குமார் உள்ளிட்ட 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட பிரதீப்பிற்கும், ரமேஷ்குமார் உள்ளிட்ட சிலருக்கும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.