ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் 27-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

ஏழை தொழிலாளர் களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் வருகிற 27-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.;

Update: 2019-02-23 22:30 GMT
நாமக்கல், 

இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசால் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்புற ஏழைகளுக்கு குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு உள்ள ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கான ஒருமுறை சிறப்பு நிதிஉதவி ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

எனவே வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியான நபர்கள் தங்களது வட்டார வளர்ச்சி அலுவலகம் அல்லது நகராட்சி அலுவலகம் அல்லது பேரூராட்சி அலுவலகங்களில் உரிய விண்ணப்பம் அளித்து பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்கான விண்ணப்ப படிவம் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களிலும் கிடைக்கும். விண்ணப்பத்துடன் குடும்ப அட்டை நகல், குடும்ப தலைவர் அல்லது தலைவியின் வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட அட்டை நகல், தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் எனில் அதற்கான அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து வழங்க வேண்டும்.

எனவே நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்து, பெயர் பட்டியலில் விடுபட்ட நபர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களது விண்ணப்பத்தை தொடர்புடைய உள்ளாட்சி அலுவலகங்களில் வருகிற 27-ந் தேதி மாலை 5 மணிக்குள் அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்