வீடுகளை இடிக்க எதிர்ப்பு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியேற பொதுமக்கள் முயற்சி
வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியேறும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
பூந்தமல்லி,
பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட சென்னீர்குப்பம் ஊராட்சியில் பள்ளிக்கூட தெருவில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சுற்றிலும் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. பள்ளிக்கு தானமாக கொடுக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி இருப்பதாக வழக்கு தொடரப்பட்டு வீடுகளை இடிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) வருவாய் துறையினரால் இங்குள்ள வீடுகளை இடிக்க உள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி வைத்து ஊராட்சி அலுவலகத்தில் குடியேற முயன்றனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்:-
நாங்கள் இங்கு பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இங்குள்ள 1½ ஏக்கர் நிலத்தை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் அரசு பள்ளி அமைக்க தனி நபர் ஒருவர் தானமாக கொடுத்துள்ளார். அதில் 20 சென்ட் நிலத்தில் வீடுகள் உள்ளது. தற்போது இங்குள்ள வீடுகள் பள்ளிக்கு அளித்த இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது.
அந்த இடத்தை மீட்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தற்போது வீடுகளை இடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதற்காக வருவாய் துறை அதிகாரிகள் வீடுகளை கணக்கெடுத்து சென்றுள்ளனர். இந்த வழக்கில் எங்களை சேர்க்கவில்லை எங்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டைகள் எல்லாம் உள்ளது. எங்கள் வீடுகளை இடிக்க விட மாட்டோம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.