ரேஷன் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

செங்கம் அருகே ரேஷன் கடையை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-23 22:45 GMT
செங்கம், 

செங்கத்தை அடுத்த திருவள்ளுவர் நகர் பகுதியில் அங்கன்வாடி மையம் ஒன்று இயங்கி வந்தது. சில நாட்களுக்கு முன்பு அங்கன்வாடியை வேறு ஒரு சிறிய இடத்திற்கு மாற்றிவிட்டு அந்த கட்டிடத்தில் ரேஷன் கடை திறக்கப்பட்டது.

இந்த நிலையில் அங்கன்வாடி குழந்தைகள் சுகாதாரமற்ற, பாதுகாப்பற்ற சூழலில் அமர்ந்து படிப்பதாகவும், அவர்களுக்கு தயாரிக்கப்படும் உணவு சுகாதாரமில்லாத இடத்தில் தயாரிக்கப்படுவதாகவும் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து ரேஷன் கடையை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு மீண்டும் அங்கன்வாடியை பழைய கட்டிடத்தில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி ரேஷன் கடையில் இருந்த பொருட்களை எடுத்துவிட்டு அங்கன்வாடி பொருட்களை அந்த கட்டிடத்தின் உள்ளே கொண்டு சென்றனர். மேலும் அங்கன்வாடி குழந்தைகளும் கட்டிடத்தின் உள்ளே அமர வைக்கப்பட்டனர்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் ரேஷன் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் சம்பந்தப்பட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. இதையடுத்து சிறிதுநேரம் பொதுமக்கள் கோஷமிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்