ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்க கணக்கெடுப்பு பணி: விடுபட்ட விவசாயிகள் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் 3 நாட்கள் நடக்கிறது

தர்மபுரி மாவட்டத்தில் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்க நடைபெறும் கணக்கெடுப்பு பணியில் விடுபட்ட விவசாயிகள் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

Update: 2019-02-23 22:45 GMT

தர்மபுரி,

இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் 5 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்குவதற்கு கணக்கெடுப்பு பணி கிராம நிர்வாக அலுவலர்கள் தலைமையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் ஆதார் அட்டை, செல்போன் எண், வங்கி கணக்கு புத்தகம், நிலம் குறித்த விவரம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று கணக்கெடுப்பில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிதியுதவி 3 தவணைகளாக விவசாயிகளுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த திட்டத்தில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி விடுபட்ட விவசாயிகள், வேலை தொடர்பாக வெளியூர்களுக்கு சென்றுள்ள விவசாயிகள், வேலைக்காக வெளியூர்களில் நிரந்தரமாக தங்கியுள்ள விவசாயிகளுக்கு மேலும் வாய்ப்பை வழங்கும் வகையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நாளை(திங்கட்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த முகாமின்போது வேளாண்மை துறை அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கிய குழுவினரிடம் இந்த திட்டத்தின் கீழ் இதுவரை தங்களை இணைத்து கொள்ளாத சிறு, குறு விவசாயிகள் உரிய மனுக்களை அளித்து திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இந்த வாய்ப்பினை தகுதியுடைய விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்