போலீசார் சோதனையால் திரும்பி சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் பலி போலீஸ் வாகனம் சிறைபிடிப்பு
வாணியம்பாடி அருகே போலீசார் சோதனையால் திரும்பி சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீஸ் வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.;
வாணியம்பாடி,
வாணியம்பாடியை அடுத்த சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 60), ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவர் வாணியம்பாடியில் இருந்து சங்கராபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெரியபேட்டை பாலாறு கிளை ஆற்று பகுதியில் டவுன் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
இதனை கண்ட ராதாகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளை மீண்டும் வாணியம்பாடி நோக்கி செல்ல திரும்பி உள்ளார்.
அப்போது பின்னால் வந்த மணல் ஏற்றி வந்த லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் லாரியை சரமாரியாக கல்வீசி தாக்கி, போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கணேசனை முற்றுகையிட்டு அவரது செல்போனை பறித்துக்கொண்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி அங்கு வந்தார். அவரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கணேசன் மீது நடவடிக்கை எடுக்கும் வரை கலைந்து போகமாட்டோம் என கூறி போலீஸ் வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து ஆம்பூர், திருப்பத்தூரில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.