தனியாக நின்று ஜெயிக்க முடியாவிட்டாலும் பா.ஜனதா வேட்பாளர்களை எங்களால் தோற்கடிக்க முடியும் ராம்தாஸ் அத்வாலே திடீர் பாய்ச்சல்

‘எங்களால் தனியாக ஜெயிக்க முடியாது, ஆனால் பா.ஜனதா வேட்பாளர்களை தோற்கடிக்க முடியும்' என ராம்தாஸ் அத்வாலே எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2019-02-23 10:17 GMT
மும்பை,

மத்திய சமூக நீதி மந்திரியாக இருப்பவர் ராம்தாஸ் அத்வாலே. இவர் தலைமையிலான இந்திய குடியரசு கட்சி பா.ஜனதா கூட்டணியில் உள்ளது. ராம்தாஸ் அத்வாலே பா.ஜனதா சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.

நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தென்மத்திய மும்பை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். இதற்காக கூட்டணியில் அந்த தொகுதியை தனக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார்.

இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை பா.ஜனதா - சிவசேனா கூட்டணி அறிவிப்பை வெளியிட்டது. இதில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளையும் அந்த இரு கட்சிகளும் ஒதுக்கி கொண்டன. சிறிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு பற்றி அறிவிக்கவில்லை.

இதுகுறித்து ராம்தாஸ் அத்வாலே பேசியதாவது:-

பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் எங்களுக்கு ஒரு தொகுதி கூட கொடுக்காமல் புறக்கணித்து இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் நாங்கள் அதிருப்தியில் உள்ளோம். எங்களால் தனியாக நின்று தேர்தலில் வெற்றி பெற முடியாது என அவர்கள் மனதில் நினைத்து இருக்கலாம். ஆனால் எங்களால் பா.ஜனதா, சிவசேனா வேட்பாளர்களை தோற்கடிக்க முடியும்.

பா.ஜனதா-சிவசேனா கூட்டணியை மதிக்கிறோம். ஆனால் எங்களுக்கு ஒரு தொகுதியை கூட ஒதுக்காமல் அவமதித்து உள்ளனர். இது இந்திய குடியரசு கட்சிக்கு இழைக்கப்படும் அநீதி. நான் பா.ஜனதா சார்பில் தேர்தலில் போட்டியிடமாட்டேன்.

இந்திய குடியரசு கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சியாகும். பா.ஜனதாவின் சின்னத்தில் போட்டியிட்டால் அது எங்களின் அடையாளத்தை அழித்துவிடும். கட்சியின் எதிர்காலம் கருதி கூட்டணி விவகாரத்தில் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்