மந்திரி டி.கே.சிவக்குமாரை நேரில் ஆஜராகும்படி நிர்ப்பந்தம் செய்யக் கூடாது அமலாக்கத்துைறக்கு கர்நாடக ஐகோா்ட்டு உத்தரவு
கணக்கில் வராத பணம் சிக்கிய வழக்கில் சம்மன் அனுப்பப்பட்ட விவகாரத்தில் நேரில் ஆஜராகும்படி மந்திரி டி.கே.சிவக்குமாரை நிர்ப்பந்தம் செய்யக் கூடாது என்று அமலாக்கத்துறைக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருப்பவர் டி.கே.சிவக்குமார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான டி.கே.சிவக்குமாரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் கணக்கில் வராத பணம் சிக்கியது. இதுகுறித்து மந்திரி டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக விசாரணைக்கு பிப்ரவரி 2-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று கடந்த ஜனவரி 17-ந் தேதி டி.கே.சிவக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டி இருப்பதால், காலஅவகாசம் வழங்குமாறு அவர் கோரினார்.
தடை விதிக்க கோரி மனு
இதை ஏற்றுக்கொண்ட அமலாக்கத்துறை பிப்ரவரி 22-ந் தேதி (அதாவது நேற்று) ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பியது. இதற்கிடையே அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மந்திரி டி.கே.சிவக்குமாா் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. டி.கே.சிவக்குமார் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகி வாதிட்டார்.
நிர்ப்பந்தம் செய்யக் கூடாது
இதை கேட்ட நீதிபதி, நேரில் ஆஜராக வேண்டும் என்று டி.கே.சிவக்குமாரை நிர்ப்பந்தம் செய்யக் கூடாது என்றும் அவ்வாறு ஏதேனும் கட்டாயப்படுத்தினால், அதுபற்றி மனுதாரர், கோர்ட்டுக்கு மனு மூலமாக தகவல் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.
மேலும் இந்த மனு மீதான விசாரணை அடுத்த மாதம் (மார்ச்) 7-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.