குறைதீர்க்கும் கூட்டம் ரத்து ஆனதால் மீனவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி திடீர் போராட்டம்

மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் திடீரென ரத்து ஆனதால் மீனவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-22 23:07 GMT
நாகர்கோவில், 

குமரி மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், அவர்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க வசதியாகவும் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமையில் கலெக்டர் தலைமையில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் இம்மாதத்துக்கான மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெறும் என்று மீனவர்களுக்கும், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று மீனவர்கள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். ஆனால் நேற்று நடைபெற இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக மீனவர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் வாயில் கருப்பு துணியை கட்டியபடி கலெக்டர் அலுவலகத்தின் முன்புறம் சிறிது நேரம் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மீன்தொழிலாளர் சங்க நிர்வாகிகள் அந்தோணி, அலெக்சாண்டர், ஜெஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்திக்கச் சென்றனர். அவர், அதிகாரிகளுடன் நடந்த வேறு ஒரு கூட்டத்தில் பங்கேற்றதால் அவரை சந்திக்க முடியவில்லை. இதனால் கலெக்டரின் நேர்முக உதவியாளரை சந்தித்து இதுதொடர்பாக மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை மாதந்தோறும் தவறாமல் நடத்த வேண்டும். 2018-ம் ஆண்டு சில மாதங்களும், இந்த ஆண்டில் கடந்த ஜனவரி மாதமும் கூட்டம் நடைபெறவில்லை. இன்றும் (அதாவது நேற்றும்) கூட்டம் நடைபெறவில்லை. இனிவரும் காலங்களில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டங்களை தவறாது நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.

இதையடுத்து அதிகாரிகள் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) நடத்தப்படும் என்று மனு கொடுத்த மீனவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மீனவர்களின் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்