லஞ்ச வழக்கில் சிக்கிய காஞ்சீபுரம் நகராட்சி வருவாய் உதவி அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு

லஞ்ச வழக்கில் சிக்கிய காஞ்சீபுரம் நகராட்சி வருவாய் உதவி அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2019-02-22 22:25 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் நகராட்சி உதவி வருவாய் அதிகாரியாக பணியாற்றியவர் எ.என்.செல்வம் (வயது 65). இவரிடம் காஞ்சீபுரத்தை சேர்ந்த ராஜலட்சுமி வீட்டுவரி பெயர் மாற்றம் சம்பந்தமாக அணுகினார். அதிகாரி செல்வம் ராஜலட்சுமியின் இடத்தை பார்வையிட்ட பிறகு அவரிடம் ரூ.1,000 லஞ்சம் கேட்டார். இதுகுறித்து ராஜலட்சுமி காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். அதையொட்டி, 2006-ம் ஆண்டு நகராட்சி அலுவலகத்தில் அதிகாரி செல்வம் லஞ்சப்பணம் வாங்கும்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கைதுசெய்தனர். அதே நேரத்தில், காஞ்சீபுரத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடந்தது. அப்போது படுக்கையின் அறையில் ரூ.5 லட்சம் இருந்தது தெரிந்தது. அதை உடனடியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். இந்த வழக்கு, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் மற்றும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில், அரசு வக்கீல் கவிதா ஆஜரானார்.

இந்த வழக்கை, நீதிபதி கீதாராணி விசாரித்து, லஞ்சம் கேட்ட குற்றத்திற்காக, அதிகாரி செல்வத்திற்கு, 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்தார். லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக செல்வத்திற்கு மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும், விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும் செய்திகள்