பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அதிகாரி கைது

பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-02-22 21:58 GMT
தொட்டியம்,

திருச்சி தொட்டியம் காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் நாகலெட்சுமி (வயது 60). இவருடைய கணவர் ஆறுமுகம் இறந்து விட்டார். அவரது பெயரில் இருந்த நிலத்தின் பட்டாவை தனது பெயருக்கு மாற்றித்தர காட்டுப்புத்தூர் மேற்கு கிராம நிர்வாக அதிகாரி மணிமேகலையிடம் (40) கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நாகலெட்சுமி மனு அளித்தார். ஆனால் அந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் நாகலெட்சுமி கிராம நிர்வாக அதிகாரியை அணுகி கேட்டபோது, பட்டா பெயர் மாற்றித்தர வேண்டுமானால் ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டார்.

உடனே இது குறித்து நாகலெட்சுமி தனது மகன் கருணாகரனிடம் கூறி உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கருணாகரன் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்தை கருணாகரனிடம் கொடுத்து அனுப்பினர்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி, காட்டுப்புத்தூர் மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்ற கருணாகரன் நேற்று காலை லஞ்ச பணத்தை மணிமேகலையிடம் கொடுத்தார். அதை அவர் வாங்கியபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று மணிமேகலையை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவருடைய அலுவலகத்தில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். அதன்பிறகு தொட்டியம் அருகே மணமேடு கிராமத்தில் உள்ள மணிமேகலை வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்