ஈரோட்டில் வணிகவரி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கத்தின் சார்பில், ஈரோடு பிரப்ரோட்டில் உள்ள வணிகவரி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.
ஈரோடு,
பதவி உயர்வு பட்டியலை இன்றைய தேதியில் உள்ள காலிப்பணியிடங்களை கருத்தில் கொண்டு நீண்ட பட்டியலாக வெளியிட வேண்டும். பதவி உயர்வில் கோட்ட மாறுதலில் சென்றவர்களுக்கு உரிய மாறுதல் ஆணையினை வழங்கிட வேண்டும். துணை ஆணையர், இணை ஆணையர் மற்றும் வணிகவரி ஆணையர் நிலையில் மாதந்தோறும் குறைதீர் கூட்டங்களை நடத்தி ஊழியர்களின் குறைகளை விரைந்து தீர்த்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் துணை வணிகவரி அலுவலர் சங்க மாநில செயலாளர் வாசுகி ராணி, மாவட்ட பொருளாளர் பரமசிவம் மற்றும் வணிகவரி பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.