வங்கி கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பாபநாசத்தில் வங்கி கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாபநாசம்,
தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.
விவசாயிகள் வங்கியில் வாங்கிய பயிர்க்கடன், நகைக்கடன், விவசாய கருவிகளுக்கான கடன் என அனைத்து கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடவேண்டும். நெல்கொள்முதலுக்கான தொகையை விவசாயிகளுக்கு உடனுக்குடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் அயோத்தி மற்றும் நிர்வாகிகள் முருகன், மகாலிங்கம், சிவகுருநாதன், சுவாமிநாதன், காளிதாஸ், சிவக்குமார் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.