புயல் நிவாரணம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
புயல் நிவாரணம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கீழையூர் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சித்தார்த்தன், ஒன்றிய பொருளாளர் தெஷ்ணாமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளர் பாலசுப்பிரமணியன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழக அரசு, கருணை தொகை ரூ.2 ஆயிரம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் என்று அறிவித்துள்ளது. அதில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை உடனே சரி செய்து விவசாய தொழிலாளர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை கால தாமதமின்றி வழங்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்டு விடுபட்ட வீடுகளுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும். அரசு அறிவித்த வாழ்வாதார நிவாரண தொகை ரூ.5 ஆயிரம் இதுவரை வழங்கவில்லை. அதனை உடனே வழங்க வேண்டும். 2017-2018-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்து கீழ்வேளூர் தாசில்தார் தையல்நாயகி, நியூ இந்தியா இன்சூரன்ஸ் கோட்ட மேலாளர் கணபதி சுப்ரமணியம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் 1 வாரத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக திருத்துறைப்பூண்டி-நாகை கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.