நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாற்ற எதிர்ப்பு, 3-வது நாள் உண்ணாவிரதத்தில் பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.

Update: 2019-02-22 23:00 GMT
விருத்தாசலம், 

கருவேப்பிலங்குறிச்சி அருகே சாத்துக்கூடல் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அய்யனார் கோவில் அருகில் செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் வழக்கமாக அமைக்கப்பட்ட இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட தனிநபர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இடத்திலேயே நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைளை வலியுறுத்தி கடந்த 20-ந் தேதி முதல் அய்யனார் கோவில் அருகில் விவசாயிகள், பெண்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது.

அப்போது விவசாயி ஒருவரை இறந்தது போல சவ பாடையில் படுக்க வைத்து, அவரை சுற்றிலும் அமர்ந்திருந்த பெண்கள் மார்பில் அடித்துக்கொண்டு, ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது போராட்டத்திற்கு அரசியல் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எனவே விவசாயிகள், தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நியாயமான கோரிக்கைக்காக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் எங்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வராதது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே ரெயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர். 

மேலும் செய்திகள்