முத்துப்பேட்டை அருகே விவசாயியிடம் ரூ.1¼ லட்சம் நூதன முறையில் திருட்டு
முத்துப்பேட்டை அருகே விவசாயியிடம் இருந்து ரூ.1¼ லட்சத்தை நூதன முறையில் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முத்துப்பேட்டை,
முத்துப்பேட்டை அருகே உள்ள கீழநம்மங்குறிச்சி பெத்தவேளாண்கோட்டகம் பகுதியை சேர்ந்தவர் சந்திர சேகரன் (வயது 45) விவசாயி. இவர் நேற்று முன்தினம் முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனது மகளின் திருமணத்திற்காக 8 பவுன் நகையை ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 500-க்கு அடகு வைத்தார். பின்னர் அதற்கான பணத்தை வாங்கி கொண்டு அவர் வெளியே வந்துள்ளார்.
அந்த பணத்தை மோட்டார் சைக்கிளின் டேங்க் கவரில் வைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 மர்மநபர்கள், சந்திரசேகரனிடம் 10 ரூபாய் நோட்டுகள் கீழே கிடக்கிறது என கூறியுள்ளனர். உடன் அவர் 10 ரூபாய் நோட்டுகளை எடுத்தார். அதற்குள் 2 மர்ம நபர்கள், சந்திரசேகரனின் மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் இருந்த பணத்தையும், வங்கி கணக்கு புத்தகத்தையும் திருடி சென்றனர்.
இதுகுறித்து சந்திரசேகரன் முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 மர்மநபர்களை தேடிவருகின்றனர். விவசாயியிடம் நூதன முறையில் பணத்தை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.