தண்ணீர் திருட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

சாணார்பட்டி அருகே தண்ணீர் திருட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-22 22:45 GMT
கோபால்பட்டி, 

சாணார்பட்டி ஒன்றியம் கம்பிளியம்பட்டியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு 2 மேல்நிலைத்தொட்டிகளில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்தநிலையில் குடிநீர் தொட்டிக்கு செல்லும் குழாயில் இருந்து சிலர் மோட்டார் மூலம் தண்ணீர் திருடுவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் திருட்டை தடுக்கவும், முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும் நேற்று கம்பிளியம்பட்டி-திண்டுக்கல் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சாணார்பட்டி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரோஜினி மற்றும் கம்பிளியம்பட்டி ஊராட்சி செயலர் லோகநாதன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேல்நிலைத்தொட்டிக்கு செல்லும் குழாயில் தண்ணீர் திருடுவதை கண்டறிந்து துண்டிக்கப்படும் என்றும், சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறினர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வடமதுரை அருகே உள்ள ஜி.குரும்பபட்டி ஊராட்சி கருப்பசாமி நகர், மதுரைவீரன் கோவில் பகுதிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் குடிநீர் தொட்டியில் ஏற்றப்படும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் நேற்று வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் வடமதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இன்னும் ஓரிரு நாட்களில் குழாய் உடைப்பை சரி செய்து முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து சமாதான மடைந்த கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்