கொடைக்கானல் வனப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் காட்டெருமைகள்
கொடைக்கானல் வனப்பகுதியில் தண்ணீர் பற்றாக் குறையால் குடியிருப்பு பகுதிக்குள் காட்டெருமைகள் புகுந்து வருகிறது.
கொடைக்கானல்,
கொடைக்கானல் நகர் பகுதியில் காட்டெருமைகள் அவ்வப்போது திமிலை முறுக்கி கொண்டு ஆக்ரோஷமாக சுற்றித்திரிகின்றன. இவற்றை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் முழுமையாக தடுக்க முடியவில்லை.
தற்போது வனப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் தினமும் காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகிறது. நேற்று காலை 9 மணி அளவில் பொது மக்கள் நடமாட்டம் அதிகமுளவில் உள்ள 7 ரோடு சந்திப்பு பகுதியில் 2 காட்டெருமைகள் உலா வந்தன. அப்போது எதிரே வந்த சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் விரட்டின. இதனால் அவர்கள் ஒட்டம் பிடித்தனர். பின்னர் அருகில் உள்ள கடைகளில் சென்று தஞ்சம் அடைந்தனர்.
இதற்கிடையே காட்டெருமைகள் அங்கு பாத்திரத்தில் இருந்த தண்ணீரை குடித்து விட்டு அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் காட்டெருமைகளை விரட்டினர். இதையடுத்து காட்டெருமைகள் அருகில் உள்ள தனியார் தோட்டத்துக்குள் சென்றன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே காட்டெருமைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருவதால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகாமல் தடுக்க வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.