கோரிக்கைகளை வலியுறுத்தி பழங்குடியின மக்கள் உண்ணாவிரதம்
பழங்குடியின சாதிச்சான்று வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பழனியில் பழங்குடியின மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி,
பழனி தாலுகாவில் வண்ணான்துறை, புளியம்பட்டி, பொந்துப்புளி, சண்முகம்பாறை, கத்தாலம்பாறை, குதிரையாறு உள்ளிட்ட மலையடிவார கிராம பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பழங்குடியின சாதிச்சான்றிதழ், வீட்டுமனை பட்டா மற்றும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலங்களை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதை மீட்டு தர வேண்டும் என்று பழனி தாலுகா அலுவலகத்தில் முறையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பளியர் பழங்குடியின முன்னேற்ற சங்கம் சார்பில் பழனி பஸ்நிலைய ரவுண்டானா பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர். போராட்டம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது.
இதுகுறித்து போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கூறுகையில், பழங்குடியின மக்களுக்கு எஸ்.சி. சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதால், பள்ளி மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பழங்குடியினர் (எஸ்.டி.) சான்றிதழ் வழங்க வேண்டும், சான்றிதழ் வழங்கப்படாததால் வனஉரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட நிர்வாகம் மூலம் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசாரிடம் முறையிட்டால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.