புலியூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; தம்பதி பலி
புலியூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் தம்பதிபரிதாபமாக இறந்தனர்.
கிருஷ்ணராயபுரம்,
கரூர் மாவட்டம், புலியூர் அருகே உள்ள உள்வீரராக்கியத்தை சேர்ந்தவர் பொந்துகவுண்டர் (வயது 65). இவரது மனைவி பாப்பாயி (60). இந்தநிலையில் உள்வீரராக்கியத்தில் இருந்து நேற்று கணவன், மனைவி 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் ஆர்.எஸ். வீரராக்கியத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சொந்த வேலை நிமித்தமாக சென்றனர். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு, மோட்டார் சைக்கிளில் 2 பேரும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது புலியூர் அருகே வீரராக்கியம் பிரிவு பகுதியில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையை மோட்டார் சைக்கிளில் கணவன்-மனைவியும் கடந்தனர். அப்போது திருச்சியிலிருந்து கரூர் நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கணவன்-மனைவியும் படுகாயமடைந்தனர். இதில் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பொந்து கவுண்டர் பரிதாபமாக இறந்தார். பாப்பாயி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயமடைந்த பாப்பாயியை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து பொந்துகவுண்டரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பாப்பாயியும் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அந்த வழியாக திருச்சியிலிருந்து கரூர் நோக்கி சென்ற தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விபத்து நடந்த பகுதியில் தனது காரை நிறுத்தி, விபத்து குறித்து விசாரித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கணவன்-மனைவியும் சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.