பொன்னமராவதி, அன்னவாசல், கீரனூர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு கல்விச்சீர்
பொன்னமராவதி, அன்னவாசல், கீரனூர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு கல்விச்சீர் வழங்கப்பட்டது.
பொன்னமராவதி,
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிக்கு தேவையான கல்வி சம்பந்தமான பொருட்கள், விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவைகளை ஊர்வலமாக எடுத்து சென்று வழங்கினர். இதற்கு பொன்னமராவதி வட்டார கல்வி அதிகாரிகள் ராஜாசந்திரன், பால்டேவிட்ரோசாரியோ ஆகியோர் தலைமை தாங்கினார். இந்த பொருட்கள் தலைமை ஆசிரியர் அல்போன்சாவிடம் ஒப்படைக்கப்பட்டது. முடிவில் இடைநிலை ஆசிரியர் சுதா நன்றி கூறினார்.
அன்னவாசல் ஒன்றியம் மேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராணி தலைமை தாங்கினார். பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கிராம கல்வி குழுவினர் இணைந்து பள்ளிக்கும், மாணவர்களுக்கும் தேவையான எழுது பொருட்கள், தோட்ட கருவிகள், விளையாட்டு பொருட்கள், குப்பைத் தொட்டி, குடம் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை கொண்டு வந்து பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டியிடம் வழங்கினார்கள். இதில் அன்னவாசல் வட்டாரக்கல்வி அலுவலர் பொன்னழகு உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளிக்கு கல்விச்சீர் கொண்டு வந்தவர்களை, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
பின்னர் பள்ளி வளர்ச்சி குறித்து பெற்றோர், ஆசிரியர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் வகுப்பில் முதல் இடம் பெறும் மாணவர்களுக்கு பண பத்திரங்கள் மற்றும் சான்றிதழ்கள், பதக்கங்களை தொடர்ந்து வழங்குவது எனவும், மாணவர்களுக்கு உண்டியல் வழங்கி சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளிக்கு தேவையான பலவகையான கல்வி உபகரணங்களை பொதுமக்கள் கொண்டு வந்து தலைமை ஆசிரியர் பானுமதியிடம் வழங்கினர்.
கீரனூர் அருகே உள்ள குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம் பழைய வீரக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வட்டார கல்வி அதிகாரிகள் துரைராஜ், மலர்விழிபுவனேஸ்வரி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள், கல்வி மேலாண்மை குழுவினர், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு தேவையான மேஜை, நாற்காலி, மின்விசிறி, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை பள்ளி தலைமை ஆசிரியர் லதாவிடம் வழங்கினர். முன்னதாக ஆசிரியர் பயிற்றுனர் பரமேஸ்வரி வரவேற்றார். முடிவில் ஆசிரியை பார்வதி நன்றி கூறினார்.