அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் சாலையோரங்களில் விளம்பர பதாகைகள் வைப்பது தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்,
கூட்டத்திற்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சேகர் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம் வரவேற்றார். கூட்டத்தில் சாலை சந்திப்புகள், ஆலயங்கள், மருத்துவமனைகள், நகர பகுதிகளின் முக்கிய சந்திப்புகள் உள்ள இடங்களில் விளம்பர பதாகை வைக்க கூடாது. மற்ற இடங்களில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு சாலைகளுக்கு ஏற்ப உரிய அளவுகளில் பதாகைகள் வைக்க வேண்டும். தனியார் இடத்தில் பதாகை வைத்தாலும் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், பா.ம.க. மாநில இளைஞரணி துணை செயலாளர் செந்தில், தே.மு.தி.க. நகர செயலாளர் கே.எஸ்.ரவி, மாவட்ட துணை செயலாளர் தெய்வசிகாமணி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் தனசேகர், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், காங்கிரஸ் ஒன்றிய தலைவர் முல்லைநாதன், தி.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் அர்ஜூனன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.