ஆரணி அருகே அரசுப்பணியை செய்ய விடாமல் தடுத்து வருவாய் ஆய்வாளருக்கு மிரட்டல் தி.மு.க. பிரமுகர் மீது போலீசில் புகார்
ஆரணி அருகே அரசு பணி செய்ய விடாமல் தடுத்து, மிரட்டல் விடுத்த தி.மு.க. பிரமுகர் மீது வருவாய் ஆய்வாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆரணி,
ஆரணி- சேத்துப்பட்டு நெடுஞ்சாலை விண்ணமங்கலத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கின் பின்புறம் சட்டவிரோதமாக மணல் குவித்து வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து கனிம வளத்துறை அதிகாரி, ஆரணி வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ஆரணி டவுன் வருவாய் ஆய்வாளர் ஜெயராமன், சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். அங்கு சுமார் 15 யூனிட் மணல் குவித்து வைக்கப்பட்டிருப்பது உறுதியானது.
இதையடுத்து அந்த மணலை அரசு பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக, பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, மணல் அள்ளும் பணி நடந்தது. அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் முருகன், மணலை அள்ள எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து அவர் பொக்லைன் மூலம் மணலை அள்ள விடாமல் தடுத்து, வருவாய் ஆய்வாளர் ஜெயராமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். போலீசாரை கண்டதும், முருகன் அங்கிருந்து சென்று விட்டார்.
இதுதொடர்பாக வருவாய் ஆய்வாளர் ஜெயராமன், ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதில், ‘அரசுப்பணியை செய்ய விடாமல் தடுத்து, மிரட்டல் விடுத்த தி.மு.க. பிரமுகர் முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.