நீலகிரி மாவட்டத்தில் சாலையோரங்களில் பேனர் வைக்கக்கூடாது - மாவட்ட வருவாய் அலுவலர் எச்சரிக்கை
நீலகிரி மாவட்டத்தில் சாலையோரங்களில் பேனர் வைக்கக்கூடாது என்று மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஊட்டி,
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது தொடர்பாக அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பதாகைகள் வைக்க கலெக்டர் அனுமதி வழங்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு அறிவித்து உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள், பிற வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கவனம் சிதறும் வகையில் நடைபாதைகள், நெடுஞ்சாலையோரங்கள், இணைப்பு சாலை ஓரங்கள் ஆகிய பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் டிஜிட்டல் பேனர்களையோ அல்லது சுலோக அட்டைகளையோ வைக்கக்கூடாது. ஐகோர்ட்டு மறுஉத்தரவு வரும் வரை பேனர்கள் வைக்க அனுமதி இல்லை.
சுவரொட்டிகள், டிஜிட்டல் பேனர்களை பிரிண்டிங் செய்பவர்களிடம் அரசியல் கட்சியினர் வரும் போது, கலெக்டரிடம் அனுமதி பெற்ற எண், நாள், கால அவகாசம் உள்ளிட்டவற்றை சரிபார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதி சுவர்கள் தூய்மையாக வைக்கப்பட்டு இருந்தது. தற்போது நோட்டீசுகள் அதிகளவில் ஒட்டப்பட்டு உள்ளன. ஏ.டி.சி., சேரிங்கிராஸ் ஆகிய இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளது. இவைகளை அகற்ற வேண்டும். மேலும் முக்கிய அரசியல் பிரமுகர் வரும் போது, பேனர்கள் வைக்க அரசிடம் இருந்து அனுமதி பெற்று தர வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்தனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கேத்தி பேரூராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சிகளுடன் விளம்பர பதாகைகள், பேனர்கள் வைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ் தலைமை தாங்கினார்.
ஐகோர்ட்டு உத்தரவின்படி பொது இடங்களில் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பதாகைகளை வைக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.