பட்டப்படிப்பு முடித்தால் மட்டும் போதாது போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் தயார்படுத்தி கொள்ள வேண்டும் கலெக்டர் ஆசியா மரியம் பேச்சு

கல்லூரி மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்தால் மட்டும் போதாது, அரசு வேலைக்கான போட்டி தேர்வுகளுக்கும் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும், என கலெக்டர் ஆசியா மரியம் பேசினார்.

Update: 2019-02-22 22:30 GMT
நாமக்கல், 

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தேவிகாராணி முன்னிலை வகித்தார்.

கல்லூரி முதல்வர் டாக்டர் சுகுணா வரவேற்புரை ஆற்றினார். பின்னர் நடந்த கருத்தரங்கில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என்ற தலைப்பில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமேஷ்குமாரும், போட்டி தேர்வுகள் மற்றும் சீருடை பணியாளர் தேர்வுகள் என்ற தலைப்பில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சாகுல்அமீதும், தொழில் முனைதல் மற்றும் சுய வேலைவாய்ப்பு என்ற தலைப்பில் மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் சையதும் சிறப்புரை ஆற்றினர்.

முன்னதாக கலெக்டர் ஆசியா மரியம் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-

போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அதிக புத்தகங்கள் உள்ளன. மேலும் அந்த தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பயிற்றுனர்களை கொண்டு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பயிற்சி பெற்றதில் 52 பேர் வேலைக்கு சென்று உள்ளனர்.

மாணவர்கள் பட்டப்படிப்பு படித்து முடித்தால் மட்டும் போதாது. அரசு வேலைக்கான போட்டி தேர்வுகளுக்கும் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். அதற்கு மாணவர்கள் முதல் ஆண்டு முதலே கல்லூரி பாடங்களை படிப்பதோடு, ஓய்வு நேரங்களில் போட்டி தேர்வுகளுக்கும் தயாராக வேண்டும்.


கவனத்துடனும், குறிக்கோளுடனும் தவம் இருப்பதுபோல் 2 வருடம் கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதினீர்கள் என்றால் வேலை நிச்சயமாக கிடைக்கும். போட்டி தேர்வுகளுக்காக அதிக அளவில் மாதிரி வினாத்தாள்களும், புத்தகங்களும் உள்ளன. அதை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அதேபோல் கல்லூரி படிப்பை முடித்து சுயதொழிலை தொடங்கவும் வாய்ப்புகள் உள்ளன. அதற்காக மத்திய அரசின் 3 திட்டங்கள் உள்ளன. எனவே நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் உங்களின் சுயமுயற்சியால் தான் முடியும்.

இவ்வாறு கலெக்டர் ஆசியா மரியம் பேசினார்.

பின்னர் பட்ட மேற்படிப்புகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் உள்பட பல்வேறு தகவல்கள் அடங்கிய புத்தகங்களை கலெக்டர் ஆசியா மரியம், விடுதி காப்பாளர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி கல்லூரி படிப்பை பயின்று வரும் மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்