மாவட்டத்தில் எருது விடும் விழா நடத்துவது குறித்த ஆய்வு கூட்டம் விலங்குகள் நல வாரிய ஒருங்கிணைப்பாளர் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா நடத்துவது குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் இந்திய விலங்குகள் நல வாரிய ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.மிட்டல் கலந்து கொண்டார்.

Update: 2019-02-22 22:30 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா நடத்துவது குறித்து இந்திய விலங்குகள் நல வாரிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர் எஸ்.கே.மிட்டல் தலைமையில் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரபாகர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் விலங்குகள் நல வாரிய ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.மிட்டல் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் எருது விடும் விழாக்களை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக காளைகள் தங்கும் இடம், காளைகளை மருத்துவ பரிசோதனை செய்யும் இடம், காளைகள் ஓடும் இடம், காளைகளை சேகரிக்கும் இடம் ஆகிய பகுதிகளில் தடுப்பரண்களை அமைத்திருக்க வேண்டும்.

ஒவ்்வொரு எருது விடும் விழாவிற்கு முன்னதாக காளைகள் அழைத்து வரும் பகுதிகளை சார்ந்த, கால்நடை மருத்துவரிடம் உடல் தகுதி சான்று கட்டாயம் பெற்று வரவேண்டும். காளைகள் ஓடும் பகுதி மற்றும் காளைகள் ஓடி முடிந்த பின் காளைகளை பிடிக்கும் இடங்களில் மனிதர்கள் நடமாட்டம் முற்றிலும் இல்லாமல் இருக்க காவல் துறையினர் கண்காணிக்க வேண்டும்.

எனவே காவல்துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள், கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, ஆயத்தீர்வை துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து, உச்ச நீதிமன்ற நெறிமுறைகளை கடைபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு உறுப்பினர் அயூப்கான், ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சரவணன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் மனோகரன், துணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன், உதவி இயக்குனர் டாக்டர் மரியம் சுந்தர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்