கண்டமனூர் பகுதியில் ஓடைகளில் மணல் அள்ளும் கும்பல் - விவசாயிகள் புகார்
கண்டமனூர் பகுதியில் ஆறு, ஓடைகளில் இரவு நேரத்தில் மணல் அள்ளும் கும்பலை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.
கண்டமனூர்,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் உள்ள கண்டமனூர், புதுராமச்சந்திராபுரம், சன்னாசியப்பன் கோவில் ஓடை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஓடை மற்றும் வைகை ஆற்றுப்படுகைகளான ஏழாயிரம்பண்ணை, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளிலும், வனத்துறை அலுவலகத்திற்கு பின்புறம் ஓடை, பெருமாள் ஓடை, ராமர் ஓடை, புதுக்குளத்து ஓடை ஆகிய இடங்களிலும் இரவு நேரங்களில் ஒரு கும்பல் மணல் அள்ளி செல்கின்றனர்.
ஆற்றுப்படுகை, ஓடைப் பகுதிகளில் மணல் அள்ளி செல்வதால் விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் விவசாயம் கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் கூறி வருகின்றனர்.
ஆனால் கடந்த சில மாதங்களாக வருவாய்த்துறை அதிகாரிகள் ரோந்துப் பணிக்கு செல்வது இல்லை. மேலும் மணல் அள்ளும் கும்பலை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
எனவே ஆண்டிப்பட்டி தாலுகா பகுதியில் ஓடைகள், ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.