பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்கை வேலூரில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

Update: 2019-02-22 22:30 GMT
நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில், கைதிகள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் டீக்கடை, உணவகம், இஸ்திரி கடை உள்ளிட்டவைகளை கைதிகள் நடத்தி வருகிறார்கள். மேலும் சிறையில் கைதிகள் தயார் செய்யும் உணவு பொருட்களையும் கைதிகள் விற்பனை செய்து வருகிறார்கள். பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் பெட்ரோல் பங்க் அமைக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

சிறை வளாகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா வேலூரில் நேற்று நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, காணொலி காட்சி மூலம் பாளையங்கோட்டை பெட்ரோல் பங்க்கை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை சிறை வளாகத்தில் நடந்த விழாவில் மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி தலைமை தாங்கி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் சிறைத்துறை சார்பில் 5 ஊர்களில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 4 பங்க்குகள் திறக்கப்பட்டு உள்ளன. இதில் பாளைங்கோட்டையும் ஒன்று. இது சிறைத்துறை வரலாற்றில் ஒரு புதிய பரிணாம வளர்ச்சி. இந்த பெட்ரோல் பங்க்கில் கைதிகள் மட்டும் வேலை செய்வார்கள். பாளையங்கோட்டை மத்திய சிறையில் 25 நன்னடத்தை கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றுவார்கள். இந்த பங்க் 24 மணி நேரமும் செயல்படும்.

பெட்ரோல் பங்க் வளாகத்தில் கைதிகள் தயார் செய்யும் பொருட்களை விற்பனை செய்ய சிறை அங்காடியும் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு ஆவின் பாலகம், ஏ.டி.எம். மையம் ஆகியவைகள் அமைக்கப்பட உள்ளன. மொத்தம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழக சிறைத்துறை அதிகாரி மில்டன், பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், பெட்ரோல் பங்க் ஒருங்கிணைப்பாளர் பெருமாள், பெட்ரோலியத்துறை பொது மேலாளர் ஸ்ரீகாந்த், இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன மண்டல மேலாளர் சிவக்குமார், அதிகாரிகள் சண்முகவேல், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திறப்பு விழாவை முன்னிட்டு பெட்ரோல் நிரப்ப வந்த வாடிக்கையாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. பெட்ரோல் பங்க்கில் வேலை செய்யும் கைதிகள் கருப்பு பேண்ட், நீல நிற சட்டையை சீருடையாக அணிந்து இருந்தனர்.

மேலும் செய்திகள்