அரக்கோணத்தில் தாமதமாக வந்த ரெயிலை மறித்து பயணிகள் போராட்டம்

அரக்கோணத்தில் தாமதமாக வந்த திருப்பதி பாசஞ்சர் ரெயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2019-02-22 22:30 GMT
அரக்கோணம், 

சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக திருப்பதிக்கு தினமும் இரவு 8.40 மணிக்கு பாசஞ்சர் ரெயில் சென்று வருகிறது. இந்த ரெயில் வழக்கமாக அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு 8.40 மணிக்கு வந்து விட்டு 8.42 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

நேற்று முன்தினம் வழக்கமாக 8.40 மணிக்கு வர வேண்டிய திருப்பதி பாசஞ்சர் ரெயில் 9 மணிக்கு வந்தது. அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே சிக்னலுக்காக 9.30 மணி வரை அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இந்த ரெயில் நிறுத்தப்பட்டு இருந்தது.

ரெயில் தாமதமாக வந்ததாலும், 30 நிமிடங்களாக நின்றதாலும் ரெயிலில் பயணம் செய்த பயணிகள் 20-க்கும் மேற்பட்டவர்கள் ரெயில் என்ஜின் முன்பாக தண்டவாளத்தில் நின்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்தவுடன் அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகள், ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பயணிகள் கூறுகையில், நாங்கள் தினமும் சென்னைக்கு வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது அடிக்கடி ரெயில் காலதாமதமாக செல்கிறது. இதனால் வீட்டிற்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை. ஆகவே ரெயிலின் காலதாமதத்தை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

அதற்கு அதிகாரிகள், ரெயில் காலதாமதத்தை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். பின்னர் ரெயில் மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.

இதன் காரணமாக அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்