நாடாளுமன்ற தேர்தலில் கிரித் சோமையா உள்பட 5 எம்.பி.க்களுக்கு தேர்தல் டிக்கெட் இல்லை மராட்டிய பா.ஜனதாவில் பரபரப்பு

நாடாளுமன்ற தேர்தலில் 5 எம்.பி.க்களுக்கு தேர்தல் டிக்கெட் வழங்கப்படாது என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்து இருப்பதால் மராட்டிய பா.ஜனதாவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.;

Update: 2019-02-21 22:58 GMT
மும்பை,

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

வாய்ப்பு மறுப்பு

இந்த நிலையில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளின் இடையே கடந்த திங்கட்கிழமை கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. பா.ஜனதாவுக்கு 25 தொகுதிகளும், சிவசேனாவுக்கு 23 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன. கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்தே போட்டியிட்டன. அந்த தேர்தலில் பா.ஜனதா 23 தொகுதிகளிலும், சிவசேனா 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தன.

இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தற்போது பதவியில் இருக்கும் பா.ஜனதா எம்.பி.க்கள் 5 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

மும்பை வடகிழக்கு நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த கிரித் சோமையா, புனே தொகுதி அனில் சய்ரோலே, சோலாப்பூர் தொகுதி சரத் பன்சோலே, லாத்தூர் தொகுதி சுனில் கெய்க்வாட் மற்றும் அகமத்நகர் தொகுதி திலிப் காந்தி ஆகியோர் அந்த எம்.பி.க்கள் ஆவார்.

நாடாளுமன்றத்தில் அவர்களின் பங்கேற்பு மற்றும் கடந்த 5 ஆண்டுகளில் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சிகளில் அவர்களின் பங்களிப்பு உள்ளிட்டவற்றில் தோல்வியை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சிவசேனா எதிர்ப்பு

சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கிரித் சோமையா எம்.பி. தொடர்ந்து அவதூறுகளை பரப்பியதால் அக்கட்சியின் எதிர்ப்பை சம்பாதிக்க நேர்ந்தது.

கிரித்சோமையாவை மீண்டும் தேர்தலில் நிறுத்தினால் அவருக்கு எதிராக வாக்களிக்க சிவசேனா முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் தான் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

5 எம்.பி.க்களுக்கு டிக்கெட் மறுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் மராட்டிய பா.ஜனதாவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை போகர் தொகுதி எம்.எல்.ஏ.வும், கட்சியின் மாநில தலைவர் அசோக் சவானின் மனைவியுமான அமிதா, நாந்தெட் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது.

தற்போது அந்த தொகுதியில் எம்.பி.யாக உள்ள அசோக் சவானிடம் கட்சி தொண்டர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கை வைத்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், இந்த முறை சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள மாதா தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

இதேபோல் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. தனஞ்செய் மகாதிக்கிற்கு கட்சியில் டிக்கெட் வழங்கப்படாது என தெரிகிறது. எனவே அதிருப்தியில் உள்ள அவர் பா.ஜனதாவில் இணைய வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்