12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிக்கு வந்த ஜூனியர் கல்லூரி ஆசிரியர்கள் விடைத்தாள்கள் திருத்த மாட்டோம் என்று அறிவிப்பு
மந்திரி வினோத் தாவ்டே உறுதி அளித்ததை தொடர்ந்து ஜூனியர் கல்லூரி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்யாமல் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிக்கு வந்தனர்.
மும்பை,
மராட்டியத்தில் உள்ள ஜூனியர் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை படி சம்பளம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 21-ந் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்து இருந்தனர்.
இதன் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது. எனவே தேர்வு பணிகள் பாதிக்காமல் இருப்பதற்காக நேற்று முன்தினம் இரவு கல்வித்துறை மந்திரி வினோத் தாவ்டே ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தேர்வு பணி
இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஆசிரியர்கள் தங்களது வேலைநிறுத்தத்தை கைவிடுவதாக அறிவித்தனர். நேற்று 12-ம் வகுப்பு தேர்வு தொடங்கிய நிலையில், ஜூனியர் கல்லூரி ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வு பணிகளை கவனித்தனர்.
இதுபற்றி ஆசிரியர் அனில் தேஷ்முக் என்பவர் கூறுகையில், ‘‘கல்வி மந்திரி வருகிற 26-ந் தேதி நிதி மந்திரியுடன் பேசி ஆசிரியர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்ததின் பேரில், நாங்கள் தேர்வு பணிகளை செய்கிறோம்.
மாணவர்கள் எதற்கும் பயப்பட வேண்டாம். நாங்கள் தேர்வறைக்கு வந்து கேள்வித் தாள்களை வழங்குவோம், தேர்வை கண்காணிப்போம், விடைத்தாள்களை பெறுவோம். அதே நேரத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய மாட்டோம்’’ என்றார்.