கட்சியின் நிலைமை வேதனை அளிக்கிறது மராட்டிய காங்கிரஸ் தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை ராகுல் காந்திக்கு, புனே தலைவர் கடிதம்
மராட்டிய காங்கிரஸ் தலைவர்கள் இடையே ஒற்றுமை இல்லை என ராகுல் காந்திக்கு புனேயை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் உல்கஸ் பவார் கடிதம் எழுதியுள்ளார்.
புனே,
புனே காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.சி.யுமான உல்கஸ் பவார் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
வேதனையாக உள்ளது
மராட்டிய கட்சி தலைவர்கள் ஆரம்ப காலத்தில் கட்சிக்கு விசுவாசமாக உழைத்தனர். ஆனால் தற்போது வேட்பாளர்களை நியமிப்பதில் கட்சிக்கு எதிராக சதி திட்டம் தீட்டுகின்றனர். தற்போது மாநிலத்தில் கட்சியின் நிலைமை மோசமாக உள்ளது. கட்சி தலைவர்கள் யாரிடமும் ஒற்றுமை இல்லை. ஆனால் சில தலைவர்கள் கட்சி நன்றாக ஒற்றுமையுடன் இருப்பது போன்று கண் துடைப்பு செய்கிறார்கள்.
உங்களுக்கும், பிரியங்கா காந்திக்கும் தேசிய அளவில் கிடைக்கும் நல்ல வரவேற்பை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அதேசமயம் மராட்டியத்தில் காங்கிரசின் நிலைமையை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது.
வாய்ப்பு தாருங்கள்
புனே நாடாளுமன்ற தொகுதி காங்கிரசுக்கு முக்கியமான தொகுதி ஆகும். வேட்பாளர்களை தேர்வு செய்யும் போது தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யுங்கள். வருகிற தேர்தலில் எனக்கு வாய்ப்பு தாருங்கள். கட்சியின் பழைய கம்பீரத்தை மீட்டு தருகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் கட்சியில் உள்ள சில தலைவர்களின் பெயர்களை அவர் குறிப்பிட்டு குற்றம்சாட்டி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கடித விவகாரம் மராட்டிய காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.