மதுரை விமான நிலையத்தில் ரூ.43 லட்சம் மதிப்பில் இந்திய-வெளிநாட்டு பணம் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் ரூ.43½ லட்சம் மதிப்பில் கட்டுக்கட்டாக இந்திய மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2019-02-21 23:15 GMT
மதுரை, 

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானத்தில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக மதுரை சுங்க புலனாய்வுத்துறை உதவி கமிஷனர் வெங்கடேஷ் பாபுவுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவரது தலைமையில் சுங்கத்துறை அதிகாரிகள், மதுரை விமான நிலையத்துக்கு வந்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது, பயணி ஒருவர் பெரிய அளவிலான பெட்டி ஒன்றை கொண்டு சென்றார்.

இதைக்கண்ட அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்பின்னர், அந்த பெட்டியின் உரிமையாளரை சுங்கத்துறை அதிகாரிகள் அழைத்து தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தூத்துக்குடி நாராயணன் தெருவை சேர்ந்த பார்வதி நாதன் (வயது 29) என்பதும், அவர் வைத்திருந்த பெட்டியில் ஹவாலா பணம் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்ததுடன், பார்வதி நாதனையும் கைது செய்தனர்.

இதுதொடர்பாக சுங்க புலனாய்வு துறை உதவி கமிஷனர் வெங்கடேஷ்பாபு கூறியதாவது:-

பார்வதிநாதன் கொண்டு வந்த பெட்டியை திறந்து பார்த்தபோது, அதன் உள்பக்கத்தில் துணிமணிகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் அதன் நடுவே கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. மொத்தம் ரூ.43 லட்சத்து 65 ஆயிரத்து 965 மதிப்பில் இந்தியா மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளின் பணமும் இருந்தன.

இதுதொடர்பாக பார்வதி நாதனிடம் தீவிரமாக விசாரித்து வருகிறோம். பறிமுதல் செய்யப்பட்ட பணம் அவருக்கு எப்படி கிடைத்தது, ஹவாலா பணத்தை சிங்கப்பூரில் யாருக்கு கடத்திச் செல்ல முயன்றார்? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்