பாராளுமன்ற தேர்தலையொட்டி பொது இடங்களில் விளம்பர பலகைகள் வைக்க அனுமதி கிடையாது கலெக்டர் ஷில்பா தகவல்

பாராளுமன்ற தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் பொது இடங்களில் விளம்பர பலகைகள் வைக்க அனுமதி கிடையாது என்று கலெக்டர் ஷில்பா கூறினார்.;

Update: 2019-02-21 23:15 GMT
நெல்லை,

பாராளுமன்ற தேர்தலையொட்டி, நெல்லை மாவட்டத்தில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் விளம்பர பலகைகள், டிஜிட்டல் போர்டுகள் வைப்பது தொடர்பாக அரசியல் கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை ஐகோர்ட்டு மறுஉத்தரவு வரும் வரை விளம்பர பதாகைகள், டிஜிட்டல் பேனர்கள் வைக்க கலெக்டர்கள் அனுமதி வழங்கக்கூடாது என்றும், ஐகோர்ட்டு மறுஉத்தரவு பிறப்பித்தால் எப்படி அனுமதி வழங்கவேண்டும் என்று அரசு அறிவுரை வழங்கி உள்ளது. விளம்பர பதாகைகள் வைப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்டு கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் நிலங்களில் வைப்பதாக இருந்தால் அவர்களிடம் அனுமதி பெற வேண்டும். மத்திய-மாநில அரசுக்கு சொந்தமான இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தடையின்மை சான்று பெற வேண்டும். காவல்துறையிடமும் தடையின்மை சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு அந்த விளம்பர பதாகைளின் அளவை பொறுத்து பணம் கட்டி அனுமதி பெற வேண்டும்.

அனுமதி பெற்று வைக்கப்படுகின்ற விளம்பர பலகைகள், டிஜிட்டல் போர்டுகள் ஆகியவற்றில் அனுமதி எண், நாள், காலஅவகாசம் உள்ளிட்ட தகவல்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

சாலையோரம் உள்ள பொது இடங்கள், நடைபாதை மற்றும் சாலையின் மத்திய பகுதிகளில் விளம்பர பலகைகள், டிஜிட்டல் போர்டுகள் வைக்க அனுமதி கிடையாது. கல்வி நிறுவனங்கள், கோவில்கள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனை ஆகியவற்றின் அருகிலும் விளம்பர பலகைகள், டிஜிட்டல் போர்டுகள் வைக்கக்கூடாது. இந்த விதிமுறைகளை மீறி யாராவது போர்டுகள் வைத்தால் இதுகுறித்து கலெக்டரிடம் புகார் தெரிவிக்கலாம். விதிமுறைகளை மீறுவோருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு சில அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். விளம்பர பலகைகள், டிஜிட்டல் போர்டுகள் வைப்பதில் அதிகாரிகள் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக சிலர் கூறினார்கள். அதற்கு கலெக்டர், அனுமதி இல்லாமல் விளம்பர பலகைகள், டிஜிட்டல் போர்டுகள் வைத்தால் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்