உலக தாய்மொழி தின விழா: ‘திருக்குறளில் கூறப்பட்ட கருத்துகள் இன்றைய வாழ்க்கைக்கு தேவை’ கவர்னர் பேச்சு
திருக்குறளில் கூறப்பட்ட கருத்துகள் இன்றைய வாழ்க்கைக்கு தேவை என்று கவர்னர் பேசினார்.
சென்னை,
சர்வதேச தாய் மொழி தினம் மற்றும் இந்திய கலாசார விழா சென்னை வி.ஐ.டி. பல்கலைக்கழகம் மற்றும் தேசியா சிந்தனை கழகம் சார்பில் சென்னையில் நேற்று நடந்தது. விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். கவர்னர் பன்வாரிலால் புரோகித் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-
உலகளாவிய மொழியில் அனுசரணை, கலாசார பன்முகத்தன்மை மற்றும் பன்மொழிப்படுத்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ந்தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நமது பாதுகாப்பை வளர்த்து கொள்வதற்கான மிக சக்திவாய்ந்த கருவி மொழிகள். மொழியியல் பன்முகத்தன்மை மற்றும் பன்மொழி கல்வி ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு தாய்மொழிகளும் சேவை செய்கின்றன. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 19 ஆயிரத்து 500-க்கும் அதிகமான மொழிகள் அல்லது பேச்சுவழக்குகள் இந்தியாவில் பேசப்படுகிறது.
தமிழ் மற்றும் தமிழர்கள் பற்றி பெருமிதம் கொள்கிறேன். கடந்த 16 மாதங்களாக தமிழகத்தில் தங்கி இருக்கிறேன். தமிழ் இலக்கியத்தின் கவர்ச்சிகரமான அம்சங்கள், சைவ சித்தந்தம் மற்றும் திருக்குறள் ஆகியவை மதிப்பு மிக்கவை. திருக்குறளில் கூறப்பட்ட அம்சங்கள் அனைத்தும் இன்றைய வாழ்க்கைக்கு இன்றியமையாதவை.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.