வாங்கிய கடனுக்காக வீட்டை விற்பதாக கூறி ரூ.49 லட்சம் மோசடி 2 பேர் கைது

வாங்கிய கடனுக்காக வீட்டை விற்பதாக கூறி ரூ.49 லட்சம் மோசடி செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-02-21 21:03 GMT
அம்பத்தூர்,

சென்னை நொளம்பூர் ஜஷ்வந்த் நகரைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம்(வயது 71). இவருடைய மனைவி வெற்றிச்செல்வி(59). இவர்களுடைய மருமகன் சரவணன்(45). இவர், ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் கட்டிட ஒப்பந்ததாரராக உள்ளார்.

இவர்கள் 3 பேரும் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த இவர்களின் தொழில்முறை நண்பரும், நிதி நிறுவன அதிபருமான செந்தில்குமார் என்பவரிடம் தொழில் ரீதியாக ரூ.49 லட்சம் கடன்பெற்றதாக கூறப்படுகிறது.

போலீசில் புகார்

வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்காமல் காலம் கடத்தி வந்தனர். செந்தில்குமார் தான் கொடுத்த கடனை திருப்பிக்கேட்டபோது, கடனுக்காக தங்களுக்கு சொந்தமான வீட்டை ரூ.49 லட்சத்துக்கு விற்று விடுவதாக கூறி, அதற்கான ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டுக்கொடுத்ததாக தெரிகிறது.

ஆனால் சொன்னபடி கடனை திருப்பிக்கொடுக்காமலும், வீட்டை விற்காமலும் மேலும் காலம் தாழ்த்தி வந்தனர். இதையடுத்து 3 பேர் மீதும் நொளம்பூர் போலீசில் செந்தில்குமார் மோசடி புகார் செய்தார்.

2 பேர் கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து விசாரித்தனர். அதில் சிவப்பிரகாசமும், அவருடைய மருமகன் சரவணனும் செந்தில்குமாரிடம் ரூ.49 லட்சம் கடன் பெற்று திருப்பிக்கொடுக்காமலும், அதற்கு பதிலாக வீட்டை விற்காமலும் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து சிவப்பிரகாசம், சரவணன் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்