பெற்றோர்கள் சார்பில் அரசு பள்ளிகளுக்கு கல்விச்சீர்

பெற்றோர்கள் சார்பில் அரசு பள்ளிகளுக்கு கல்விச்சீர் வழங்கப்பட்டது.

Update: 2019-02-21 22:30 GMT
அன்னவாசல்,

அன்னவாசல் ஒன்றியம், காட்டுப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், பள்ளிக்கு கல்விச்சீர் வழங்க முடிவு செய்தனர். இதையடுத்து பள்ளிக்கு தேவையான புத்தகம், மேஜை, பீரோ, மின்விசிறி, மரக்கன்றுகள், சிந்தனை புத்தகங்கள், தட்டு, டம்ளர், முதலுதவி பெட்டி, எழுது பொருட்கள், கணித பெட்டி, குப்பைத்தொட்டி மற்றும் கல்வி உபகரணங்கள், விளையாட்டு சம்பந்தப்பட்ட பொருட்கள், உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் காட்டுப்பட்டியில் உள்ள திடலில் இருந்து மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக எடுத்து பள்ளிக்கு வந்தடைந்தனர்.

தொடர்ந்து பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுபா தலைமை தாங்கினார். ஆசிரியர் சின்னக்கண்ணு வரவேற்றார். இதில் வட்டாரகல்வி அலுவலர் துரையரசன், மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். பின்னர் கொண்டு வந்த பொருட்களை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தலைமையாசிரியரிடம் வழங்கினர். இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆவுடையார் கோவில் தாலுகா கீழ்குடி வட்டாத்தூரில் கள்ளகாத்தான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சிறுகாசாவயல், பட்டமுடையான், புத்துவயல், சென்னாகரம்பை, சாத்தகுடிமேல்பாதி ஆகிய கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பீரோ, புத்தகம், பேனா, மின்விசிறி உள்பட பள்ளிக்கு தேவையான பொருட்களை கொண்டு வந்து பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரியிடம் வழங்கினர்.

பொன்னமராவதி ஒன்றியம் வார்ப்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வார்ப்பட்டு ஊர்க்கோவில் முன்பு பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பில் மடிக்கணினி, குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம், மேஜை, நாற்காலி, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து தலைமை ஆசிரியர் தங்கையாவிடம் வழங்கினர். இதில் பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் என உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கீரனூர் அடுத்துள்ள குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கல்வீச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அதிகாரிகள் துரைராஜ், புவனேஸ்வரி மலர்விழி ஆகியோர் தலைமை தாங்கினர். தொடர்ந்து பொதுமக்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை கழகத்தினர், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் ஊர்வலமாக பள்ளிக்கு தேவையான பொருட்களை பள்ளிக்கு கொண்டு வந்து தலைமையாசிரியரிடம் வழங்கினர்.

இதேபோல் கீரனூர் அடுத்த குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள், பெற்றோர்கள் பள்ளிக்கு தேவையான பொருட்களை பள்ளி தலைமையாசிரியர் அல்போன்ஸ் சகாயராஜிடம் வழங்கினர்.

ஒடுக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கன்னியாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கறம்பக்குடி அருகே உள்ள செவ்வாய்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விஜயரவி பல்லவராயர் தலைமை தாங்கினார். தொடர்ந்து பொதுமக்கள், பெற்றோர்கள் சார்பில் கொண்டு வந்த பீரோ, மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் பள்ளி தலைமையாசிரியர் சாந்தியிடம் வழங்கினர். இதேபோல் புதுக்கோட்டை விடுதி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கல்விச்சீர் பொருட்களை பெற்றோர்கள், பொதுமக்கள் வழங்கினர். 

மேலும் செய்திகள்