தேனி உழவர்சந்தையில் ‘நீரா’ பானம் விற்பனை தொடக்கம்

தேனி உழவர்சந்தையில் ‘நீரா’ பானம் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது.

Update: 2019-02-21 23:00 GMT
தேனி,

தென்னை விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த தென்னை மரங்களில் உள்ள விரியாத பாளைகளில் இருந்து ‘நீரா’ பானம் எடுக்க தமிழகத்தில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் தேனி தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் ‘நீரா’ பானம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது.

முதற்கட்டமாக 145 விவசாயிகளுக்கு மொத்தம் 5 ஆயிரத்து 110 தென்னை மரங்களில் ‘நீரா’ பானம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி பெற்ற விவசாயிகள் இந்த பானம் எடுப்பதற்கான பணிகளில் ஈடுபட்டனர். அதன்படி மாவட்டத்தில் ‘நீரா’ பானம் உற்பத்தி தொடங்கியது.

தற்போது தேனி உழவர்சந்தையில் இந்த பானம் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. 250 மில்லி லிட்டர் அளவுள்ள பானம் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் இதை வாங்கி பருகி செல்கின்றனர். பலரும் வீட்டுக்கு வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து ‘நீரா’ பானம் விற்பனையில் ஈடுபட்ட விவசாயி ராஜா கூறுகையில், ‘தமிழக அரசு தென்னையில் ‘நீரா’ பானம் எடுக்க அனுமதி அளித்ததால் தென்னை விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். தேங்காய், இளநீர் மட்டுமே விற்பனை செய்து வந்த நிலையில், இந்த பானம் தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் தென்னை விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். கோடை காலத்துக்கு உகந்த பானமாக இது இருக்கும்’ என்றார்.

மேலும் செய்திகள்