கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல்; 2 பேர் மீது தாக்குதல் சாலை மறியல் செய்ய பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
திருப்பூர் காந்திநகரில் கோவில் திருவிழாவின் போது இருதரப்பினர் மோதிக்கொண்டனர். அப்போது 2 பேர் தாக்கப்பட்டதால், தாக்கியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.;
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் காந்திநகரை அடுத்த பத்மாவதிபுரத்தில் செல்வவிநாயகர் மற்றும் மாகாளியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் கடந்த 15-ந்தேதி முதல் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் போது இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் அருகே நின்று கொண்டிருந்த அண்ணா காலனியை சேர்ந்த தங்கராஜ் (வயது 49) மற்றும் அவருடைய மருமகன் மனோகரன் ஆகியோரை 5 பேர் கொண்ட கும்பல் கட்டையால் ஓடஓட விரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தங்கராஜ் மற்றும் மனோகரனை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பத்மாவதிபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை கோவில் முன்பு திரண்டனர். இதுபற்றிய தகவலறிந்த அனுப்பர்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது தங்கராஜ் மற்றும் மனோகரன் மர்ம ஆசாமிகளால் தாக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வருவதால் அவர்களை தாக்கியவர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கைது செய்யாவிட்டால் கோவிலை இழுத்து பூட்டுவோம் என்றும் பொதுமக்கள் ஆவேசமாக கூறினார்கள். ஒருகட்டத்தில் சாலைமறியல் செய்யவும் முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசமடையாத பொதுமக்கள் நேற்று மாலை வரை கோவில் வளாகத்திலேயே திரண்டிருந்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இருவரையும் தாக்கியதாக 5 பேர் மீது அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் 2 பேரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.