கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்தது

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்தது.

Update: 2019-02-21 21:30 GMT
ஈரோடு, 

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வாரத்திற்கான சந்தை நேற்று கூடியது. இதில் ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம், மதுரை, திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகளை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதேபோல் மாடுகளை வாங்குவதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கோவா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் வந்தனர். அவர்கள் விவசாயிகளை சந்தித்து தங்களுக்கு தேவையான மாடுகளை விலைபேசி வாங்கி சென்றனர். இதேபோல் தமிழக அரசின் மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கறவை மாடுகளை வாங்குவதற்காக பெண்களும், கால்நடை டாக்டர்கள் குழுவினரும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஈரோட்டுக்கு வந்தனர்.

இதுகுறித்து மாட்டுச்சந்தை மேலாளர் முருகன் கூறியதாவது:-

ஈரோடு மாட்டுச்சந்தைக்கு 500 பசு மாடுகளும், 400 எருமை மாடுகளும் என 900 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதேபோல் 200 வளர்ப்பு கன்றுக்குட்டிகள் கொண்டு வரப்பட்டு இருந்தது. மாடுகளை வாங்குவதற்காக வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்தனர். மேலும், கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மாடுகளை வாங்குவதற்காக பெண்களும் சந்தைக்கு வந்தனர். அவர்கள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வந்து மாடுகளை வாங்கி வருவதால், இந்த வார சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்