ஓட்டுக்கான பணத்தை சட்டப்படியாக கொடுப்பதுதான் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் கமல்ஹாசன் பேச்சு

ஓட்டுக்கான பணத்தை சட்டப்படியாக கொடுப்பதுதான் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் என்று திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கூறினார்.

Update: 2019-02-21 23:15 GMT

திருவாரூர்,

திருவாரூர் தெற்குவீதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மண்டல பொறுப்பாளரும், செயற்குழு உறுப்பினருமான சவுரிராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் அருண்(திருவாரூர் தெற்கு), செய்யது அனாஸ்(நாகை தெற்கு), சதாசிவம்(தஞ்சை தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செயற்குழு உறுப்பினர்கள் நடிகை பிரியா ராஜ்குமார், பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிர்வாகிகள் வைத்தியநாதன், தொகுதி பொறுப்பாளர்கள் சுரேந்திரன், ரவிச்சந்திரன், ஆர்த்தி ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் குடும்ப அரசியலை மாற்ற வேண்டும். தற்போது மெகா கூட்டணி உருவாகியுள்ளதாக தெரிவித்து உள்ளனர். அது மெகா கூட்டணியா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். கஜா புயலில் சாய்ந்த மரங்களை சீரமைக்கவில்லை. ஒரே நாளில் நடப்பட்டது மின் கம்பங்களை மட்டும் தான். அவர்கள் தேவைக்காக செய்தது தான். பாதிப்புக்கு நிதி கொடுப்பது பணம் இல்லை என கூறியவர்கள், பொங்கல் பண்டிகைக்கு எப்படி பணம் கொடுத்தார்கள் என்பது தான் புரியவில்லை.

ஓட்டுக்கான பணம்

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் பேருக்கு ரூ.2 ஆயிரம் தருவதாக அரசு தெரிவித்துள்ளது. 60 லட்சம் பேர் ஏழையாக இருப்பதற்கு காரணம் இரண்டு திராவிட கட்சிகள் தான். ஓட்டுக்கான பணத்தை சட்டப்படி கொடுப்பதற்காகத்தான் இந்த பணத்தை தருகின்றனர்.

இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். துணிச்சலாக பேசினால் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படும். அதை பற்றி எனக்கு கவலையில்லை. நேர்மைக்கு என்று தனி இடம் உண்டு.

நாடாளுமன்ற தேர்தல் வேண்டாம், அடுத்த தேர்தலில் பார்த்து கொள்ளலாம் என்று விட முடியாது. நாட்டின் அரசியலில் தமிழனுக்கு உரிமையும், அருகதையும் நிச்சயம் உண்டு. பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் பங்கு தமிழனுக்கு உண்டு. அதனை ஊர்ஜிதப்படுத்த வேண்டியது பாராளுமன்ற தேர்தல் தான். ந

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திட அனைவரும் ஓட்டு போடுங்கள். உங்களுடைய ஆசையை நிறைவேற வேண்டும் என்பதற்காக இருக்கின்றதை விட்டு விட்டு வந்துள்ளேன். உங்களுடைய ஆசை மட்டுமல்ல அது என்னுடைய ஆசையும்தான். அரசியலுக்கு இதுவரை வராமல் இருந்து விட்டேன். காலதாமதமாக, ஆனாலும் வந்து விட்டேன். இனி எஞ்சிய வாழ்கை உங்களுக்காக.

அரசியல் எனக்கு வியாபாரம் இல்லை. எனது கடமை. நேர்மையின் சின்னமாக மக்கள் நீதி மய்யம் இருந்து வருகிறது. எனது கொள்கை மக்கள் நலம் தான். கிராம பஞ்சாயத்து கூட்டத்திற்கு சென்றது நாங்கள் தான். ஆனால் இன்று சிலர் நடத்தி வருகின்றனர். அதைப்பற்றி கேள்வி கேட்டால் கோபப்படுகிறார்கள்.

டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மையமாக்க வேண்டும். விவசாயத்தில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும். நீரை சிக்கமான பயன்படுத்தி சாகுபடி செய்வதற்கான முறைகள் கண்டுபிடிக்கப்படும்.

கஜானாவை காலியாக்கும்போது அதை வரி என்ற பெயரில் நிரப்புபவர்கள் மக்களாகிய நீங்கள் தான். எனவே மக்கள் நீதி மய்யத்தை காப்பாற்றி வளர்க்கப்போவது நீங்கள் தான். தேர்தல் என்பது 5 ஆண்டுக்கு ஒரு முறை வருகிறது. இந்த தேர்தலில் முதலாளிகள் மக்களாகிய நீங்கள் தான். ஏடா கூடா ஓட்டு போட்டு விடாதீர்கள். அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவோம். நாளை நமதே என ஆக்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர் ஞானசம்மந்தம் வரவேற்றார். முடிவில் திருவாரூர் தொகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்