நடுக்கடலில் பிடிக்கப்பட்ட மண்டபம் மீனவர்கள் 8 பேர் சிறையில் அடைப்பு
நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது சிறைபிடிக்கப்பட்ட மண்டபத்தை சேர்ந்த 8 மீனவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் ஏராளமானோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இந்த பகுதி மீனவர்கள் வாரத்துக்கு 3 நாட்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் 310 விசைப்படகுகளில் 1200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த வழியாக குட்டி கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இந்த படகுகளை கண்டதும் அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தனராம். மேலும் ஒரு சில படகுகளை சுற்றிவளைத்து அதில் இருந்த மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து மண்டபத்தை சேர்ந்த மலைராஜ், சிவஞானம் ஆகியோருக்கு சொந்தமான 2 படகுகளையும், அதில் இருந்த மீனவர்கள் நாரையூரணியை சேர்ந்த கருப்பையா(வயது47), உத்தரகோசமங்கையை சேர்ந்த சண்முகம்(40), மானாமதுரையை சேர்ந்த முருகன்(47), வட்டான்வலசையை சேர்ந்த ஆறுமுகம், மேலமான்குண்டு கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம்(58), நாகுச்சாமி(56), ராமநாதபுரத்தை சேர்ந்த உமர் அலி, நாகாச்சியை சேர்ந்த சுப்பிரமணியன்(45) ஆகிய 8 மீனவர்களையும் சிறைபிடித்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் யாழ்பாணம் மீன்துறை அலுவலகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு இந்திய துணை தூதரக அதிகாரிகள் மீனவர்களை சந்தித்து அவர்களிடம் விசாரித்து உணவு பொட்டலம் வழங்கினர். இலங்கை மீன்துறை அலுவலக வளாகத்திற்குள் மீனவர்கள் சாப்பிட அனுமதி வழங்கப்படாததால் அவர்கள் அங்குள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் ஊர்க்காவல் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 27-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 8 மீனவர்களும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நடுக்கடலில் 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற சம்பவம் மண்டபம் பகுதி மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.