சிம்கார்டு காணாமல் போன பிரச்சினையில் ஆட்டோ டிரைவரை கொலை செய்த நண்பருக்கு 10 ஆண்டு சிறை திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு

சிம்கார்டு காணாமல் போன பிரச்சினையில் ஆட்டோ டிரைவரை கொலை செய்த நண்பருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2019-02-21 18:47 GMT
திருப்பூர், 

திருப்பூர் அனுப்பர்பாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி(வயது 35). இவர் அந்த பகுதியில் ஒர்க்‌ஷாப் நடத்தி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ஆதீஸ்வரன்(32). இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். இவர்கள் இருவரும் நண்பர்கள். இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந்தேதி காந்திநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு எதிரே உள்ள காலி இடத்தில் இருவரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது திருப்பதியின் சிம்கார்டு காணாமல் போனதாக தெரிகிறது. அந்த சிம்கார்டை ஆதீஸ்வரன் தான் எடுத்திருக்க கூடும் என்ற எண்ணத்தில் திருப்பதி, இதுகுறித்து அவரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆதீஸ்வரன் கோபம் அடைந்து, திருப்பதியையும், அவருடைய பெற்றோரையும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த திருப்பதி அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து ஆதீஸ்வரனின் தலையில் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ஆதீஸ்வரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திருப்பதியை கைதுசெய்த னர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் லட்சுமிநகரில் உள்ள 2-வது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை நீதிபதி முகமது ஜியாபுதீன் விசாரித்து வந்தார். விசாரணை முடிந்து விட்ட நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட திருப்பதிக்கு 10 ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முகமது ஜியாபுதீன் தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறைதண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முருகேசன் ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்