அனுமதிபெறாமல் டிஜிட்டல் போர்டுகள் வைத்தால் நடவடிக்கை கலெக்டர் வீரராகவராவ் எச்சரிக்கை
அனுமதி பெறாமல் டிஜிட்டல் போர்டுகள் வைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் எச்சரித்துள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள், தட்டி போர்டுகள் ஆகியவைகள் வைப்பதை ஒழுங்குபடுத்தும் வகையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் அடங்கிய சிறப்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:- தமிழக அரசின் அரசாணைகளில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படியும், சென்னை உயர்நீதிமன்ற அறிவுரைகளின்படியும் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசியல் மற்றும் இதர நிகழ்ச்சிகள் தொடர்பாக டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள், தட்டி போர்டுகள் வைக்க விரும்புவோர் இனிவரும் காலங்களில் உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள் மற்றும் தட்டி போர்டுகளை சாலையின் இருபுறங்களிலும், சாலை விளிம்புகளிலும், நடைபாதைகளிலும், பெருஞ்சாலைகளிலும் மற்றும் இதர பிற சாலைகளிலும் வைக்கக்கூடாது. இதுபோன்ற இடங்களில் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள் மற்றும் தட்டி போர்டுகளை வைப்பதனால் சாலையை கடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் பிற வாகனங்களில் செல்பவர்கள் கவனம் சிதறுவதோடு மட்டுமல்லாமல் நடைபாதையில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.
டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள் மற்றும் தட்டிபோர்டுகள் வைக்க அனுமதி கோருபவர்கள் 2 நாட்களுக்கு முன்பாகவே படிவம் 1-ஐ பூர்த்தி செய்து படிவத்துடன் எந்த நோக்கத்திற்காக டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள், தட்டி போர்டுகள் வைக்கப்பட உள்ளன, அதன் அளவுகள், எந்தெந்த இடங்களில் எத்தனை வைக்கப்பட உள்ளன, வைக்கப்படும் இடம் தனி நபருக்கு சொந்தமான இடம் அல்லது கட்டிடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட இடம் மற்றும் கட்டிட உரிமையாளர்களிடம் கடிதம், அதன் வாசகங்கள், அதில் இடம் பெறும் படங்கள், தேவைப்படின் அதன் நகல்கள் குறித்த விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பகுதியின் காவல் நிலையத்தில் இருந்து போலீஸ் துணை சூப்பிரண்டு அல்லது இன்ஸ்பெக்டர் தடையின்மை சான்றுடனும் மற்றும் தொடர்புடைய ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சியில் அனுமதிக் கட்டணம் செலுத்தி அதற்கான அசல் ரசீதுடன் மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பம் அளிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு காலதாமதமின்றி அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் முன்பாகவோ, சாலை மூலைகளிலோ, சாலை சந்திப்புகளிலோ அறிவிப்பு செய்யப்பட்ட நினைவு சின்னங்கள், சிலைகள் முன்பாகவோ மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களிலோ டிஜிட்டல் பேனர்கள், விளம்பர தட்டிகள் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் வைக்க அனுமதி இல்லை. அனுமதி பெற்று வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள் மற்றும் தட்டி போர்டுகளின் அடியில் அனுமதி எண் குறிப்பிடப்பட வேண்டும். அனுமதியில்லாமல் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள் மற்றும் தட்டி போர்டுகள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் உடனடியாக அகற்றப்படும்.
அனுமதி பெற்று வைக்கப்படும் விளம்பர பலகைகள் விதிமுறைகளுக்கு உட்படாமல் இருப்பின் அந்த அனுமதி ரத்து செய்யப்படும். பேனர்களை அனுமதி வழங்கப்பட்ட காலம் முடிவடைந்தவுடன் உடனடியாக அகற்ற வேண்டும். அனுமதி இல்லாமல் விளம்பர போர்டுகள் வைப்பவர்கள் மீது சட்ட விதிகளுக்குட்பட்டு குற்ற வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, பரமக்குடி சப்-கலெக்டர் விஷ்ணுசந்திரன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.