சேந்தமங்கலம் அருகே காலிக்குடங்களுடன், பொதுமக்கள் சாலைமறியல் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக புகார்

காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறி, சேந்தமங்கலம் அருகே நேற்று பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2019-02-21 23:00 GMT
சேந்தமங்கலம், 

சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் துத்திகுளம் ஊராட்சியில் ரெட்டிபுதூர் காலனி உள்ளது. இந்த பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாயில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு சென்று அப்பகுதியில் வினியோகம் நடக்கிறது.

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் முழுமையாக ஏற்றப்படாமல் குறைவான தண்ணீர் ஏற்றி வந்ததால் பற்றாக்குறை ஏற்பட்டு அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். மேலும் குடிநீர் பற்றாக்குறையால், கேன்களில் விற்கப்படும் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வந்ததாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், காவிரி கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் இருந்து காலனிக்கு வரும் வழியில் சிலர் முறைகேடாக தண்ணீரை எடுத்துக்கொள்வதால் அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

எனவே இங்கு முறைகேடாக தண்ணீர் எடுப்பதை தடுக்க வலியுறுத்தி, நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் பட்டத்தையன்குட்டை ராசிபுரம் சாலைக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன் செல்வராஜ், காளப்பநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமி, துத்திகுளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சின்னுசாமி, கிராம நிர்வாக அலுவலர் யுவராணி ஆகியோர் சாலைமறியல் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்