அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் வருமான வரித்துறையினர் ‘திடீர்’ சோதனை உதவியாளர் வீட்டிலும் நடந்ததால் பரபரப்பு
அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபத்திலும், அவரது உதவியாளர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் ‘திடீர்’ சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை,
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து நாட்டறம்பள்ளி செல்லும் மெயின் ரோட்டில் பார்த்தசாரதி தெருவில் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இங்கு நேற்று காலை 9 மணிக்கு திடீரென 2 கார்களில் வருமானவரி துறையினர் வந்தனர். பின்னர் அதிகாரிகள் மண்டபத்தின் கதவுகளை மூடிவிட்டு அங்கு சோதனை மேற்கொண்டனர்.
அதேபோல், ஜோலார்பேட்டையில் உள்ள திருமண மண்டப மேலாளர் சத்தியமூர்த்தி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
மேலும் அமைச்சரின் நேர்முக உதவியாளரும், ஜோலார்பேட்டை நகர அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.பி.சீனிவாசன் வீட்டிலும் வருமானவரி துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை காலை 9 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
இதற்காக டெல்லியில் இருந்து 11 அதிகாரிகளும், சென்னையில் இருந்து 9 அதிகாரிகளும் 5 கார்களில் வந்திருந்தனர்.
இதே போல குடியாத்தம் அருகே உள்ள கே.வி.குப்பத்தில் தி.மு.க. முன்னாள் பொதுக்குழு உறுப்பினரும், ஒப்பந்ததாரருமான வி.டி.சிவக்குமார் என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனைதொடர்ந்து வருமான வரித்துறையினர் வி.டி.சிவக்குமாரை அழைத்துக்கொண்டு, அவர் வங்கி கணக்கு வைத்துள்ள கே.வி.குப்பத்தில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.