மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் முன்பு டிஜிட்டல் பேனர்கள் வைத்தால் 1 ஆண்டு சிறை கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் எச்சரிக்கை

கோவில், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் முன்பு டிஜிட்டல் பேனர்கள் வைத்தால் 1 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-02-21 23:00 GMT
திருவண்ணாமலை,

பேனர்கள் வைப்பதில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து அனைத்து கட்சியினர் மற்றும் அச்சக உரிமையாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் கந்தசாமி பேசியதாவது:-

பேனர்கள் வைப்பது தொடர்பாக சில கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சாலையோரங்களில் அல்லது சாலையொட்டிய நடைபாதைகளில் விளம்பர பதாகைகள் வைத்திட தேவையான இடம் இருக்கும் பட்சத்தில் சாலை பிரியும் இடத்தில் விளம்பரம் செய்திட அதிகாரிகள் அனுமதியளிக்க கூடாது.

10 அடிக்கும் குறைவான இடைவெளி உள்ள சாலையோரங்களில் பதாகைகள் வைக்க அனுமதியளிக்க கூடாது. நடைபாதையற்ற சாலைகளில் விளம்பர பேனர்கள் அமைத்திடும் போது பாதசாரிகளுக்கென சாலையோரத்தில் இருந்து குறைந்தபட்சம் 10 அடி இடைவெளி விடப்பட வேண்டும். சாலையில் வைக்கப்படும் பேனர்கள் சீரான அளவுடையதாக இருக்க வேண்டும்.

கல்வி நிறுவனம், வழிபாட்டு தலம், மருத்துவமனை, சாலையின் முனை, சாலை சந்திப்புகள் ஆகியவற்றின் முன்புறம் டிஜிட்டல் பேனர்கள் வைக்கக்கூடாது. விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டால் பொதுமக்கள் 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த விதிகளை மீறுபவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

பேனர் வைப்பவர்கள் பேனரின் கீழ்புறத்தில் அனுமதி எண், நாள், அனுமதிக்கப்பட்ட நாட்களின் வரம்பு, விளம்பர பேனரின் அளவு மற்றும் அச்சக தொலைபேசி எண் ஆகியவை அச்சிடப்பட்டிருக்க வேண்டும். இவை இல்லாமல் பேனர் வைத்தால் அவை அகற்றப்படும். மேலும் அச்சகத்துக்கு வருபவர்களிடம் மேற்கண்ட அனுமதி எண் வாங்கிய பின்னரே அவர்களுக்கு பேனர் அச்சிட்டு கொடுக்க வேண்டும். பேனர் வைப்பதற்கு 15 நாட்கள் முன்னதாகவே அனுமதி பெற வேண்டும்.

விண்ணப்பிப்பவர்கள், பேனர் வைக்கப்படும் இடத்துக்கு சொந்தமானவரிடம் இருந்து தடையில்லா சான்று, அரசு நிலமாயின் அத்துறை அதிகாரியிடம் தடையில்லா சான்று, காவல்துறையின் தடையில்லா சான்று போன்ற அனைத்து சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். சாலையின் அளவுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவு அடிப்படையில் பேனர்கள் வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், சப்-கலெக்டர் ஸ்ரீதேவி, நகராட்சி கமிஷனர் பாரிஜாதம், திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள், அச்சக உரிமையாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது குறித்து அனைத்து கட்சியினருடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் (கிராம ஊராட்சி) குமரேசன் முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் மோகன் வரவேற்றார். இதில் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்துக்கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

சேத்துப்பட்டு பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ரவி தலைமையிலும், பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாண்டியன் தலைமையிலும், பெரணமல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கோபிநாதன் தலைமையிலும் நடந்தது.

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகர் தலைமையில் நடந்தது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.சுப்பிரமணியன், அலுவலக மேலாளர் விஜயன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்