திட்டமிட்டு செயல்பட்டால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் அமைச்சர் நிலோபர் கபில் பேச்சு
திட்டமிட்டு செயல்பட்டால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று அமைச்சர் நிலோபர் கபில் கூறினார்.
ஆம்பூர்,
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாதனூர் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். கலை அறிவியல் கல்லூரி இணைந்து தொழில்நெறி வழிகாட்டுதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு அகரம்சேரியில் செயல்படும் கல்லூரி வளாகத்தில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் கோமதி முன்னிலை வகித்தார். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் அருணகிரி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்து, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
வாழ்க்கையில் முன்னேற திட்டமிட்டு, இலக்கு வைத்து செயல்பட்டால்தான் முன்னேற முடியும். படிக்கும் மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் வேலைக்கு செல்ல தமிழ்நாடு வேலை வாய்ப்பு திறன் பயிற்சி கழகத்தில் பதிவு செய்ய வேண்டும். மாணவர்களுக்கு படிப்பு முக்கியம். அதேபோல் வேலைக்கு தகுந்த திறன் இருக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் வெள்ளிக்கிழமை தோறும் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதன்மூலம் சராசரியாக 100 பேர் வேலைக்கு செல்கின்றனர். மாணவர்கள் படித்து முடித்த உடன் வேலைக்கு செல்ல அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசு வழங்கும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைவரும் பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் வேலை வாய்ப்பு மண்டல இணை இயக்குனர் மீனாட்சி, பட்டய கணக்காளர் கலையழகன், ஆர்.கே.விமல்நாதன், உதவி இயக்குனர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்து பேசினர். முடிவில் கல்லூரி விரிவுரையாளர் கோபி நன்றி கூறினார்.