கல்யாண் மாநகராட்சி கூட்டத்தில் கமிஷனர் மீது பெண் கவுன்சிலர் வளையல் வீசியதால் பரபரப்பு

கல்யாணில் மாநகராட்சி கூட்டத்தின் போது கமிஷனர் மீது பெண் கவுன்சிலர் வளையலை கழற்றி வீசியதால் பரபரப்பு உண்டானது.

Update: 2019-02-20 22:35 GMT
அம்பர்நாத்,

கல்யாண் - டோம்பிவிலி மாநகராட்சியின் நகர மேம்பாட்டு துறை கவுன்சிலர்கள் தெரிவிக்கும் புகார்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று மாநகராட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் மேயர், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு இருந்தனர்.

அப்போது, பா.ஜனதா கவுன்சிலர் பிரமிளா சவுத்ரி மாநகராட்சியின் நகர மேம்பாட்டுத்துறை செயல்படாமல் இருப்பதாக கூறிக் கொண்டு, மாநகராட்சி கமிஷனர் கோவிந்த் போட்கே இருக்கையை நோக்கி ஆவேசமாக வந்தார்.

கமிஷனர் மீது வளையல் வீச்சு

திடீரென அவர் தான் அணிந்து இருந்த வளையல்களை கழற்றி கமிஷனர் கோவிந்த் போட்கே மீது வீசினார். இதில் அந்த வளையல்கள் அவரது மேஜையின் மீது விழுந்து நொறுங்கின. இதை சற்றும் எதிர்பார்க்காத கமிஷனர் கோவிந்த் போட்கே அதிர்ச்சி அடைந்தார். செய்வதறியாது திகைத்து போய் நின்றார்.

இந்த சம்பவத்தால் மிகுந்த அதிருப்திக்கு உள்ளான அவர் மாநகராட்சி கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினார். இதையடுத்து மாநகராட்சி கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

தன் மீது வளையலை கழற்றி வீசிய கவுன்சிலர் பிரமிளா சவுத்ரி மீது போலீசில் புகார் கொடுக்க உள்ளதாக கமிஷனர் கோவிந்த் போட்கே கூறினார்.

மாநகராட்சி கூட்டத்தில் பெண் கவுன்சிலர் கமிஷனர் மீது வளையலை கழற்றி வீசிய சம்பவம் கல்யாணில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்