ஜல்லிக்கட்டில் காயம் அடைந்த மாடுபிடி வீரர்களுக்கும் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் கலெக்டரிடம் மனு

ஜல்லிக்கட்டில் காயம் அடைந்த மாடுபிடி வீரர்களுக்கும் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2019-02-20 23:00 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட ஜல்லிக் கட்டு காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் சார்பில் நேற்று கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது:-

தமிழ் பண்பாடு போற்றும் ஜல்லிக்கட்டு தமிழகத்தில் வேறு மாவட்டங்களை காட்டிலும் நாமக்கல் மாவட்டத்தில் விதிமுறைகளுக்கு உட்பட்டும், ஒருங்கிணைப்பு குழுக்களின் கருத்தை கேட்டறிந்தும் நடத்தப்பட்டு வருகிறது. மாடுகளுக்கு டோக்கன் முறையை அமல்படுத்தி உள்ளர்கள். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு செல்லும் நாங்கள் இதை நன்கு அறிவோம்.

ஆனால் ஒவ்வொரு முறையும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் எடுக்கப்படும் காப்பீடு அம்சங்கள் எங்களை பொறுத்தவரையில் பயனற்றதாக அமைகிறது.

எனவே ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகளோ அல்லது வீரர்களோ இறந்தால் மட்டுமே காப்பீடுகள் செல்லும் என்கிற முக்கிய அம்சத்தை நீக்கி கை, கால் இழப்புகளையும் தகுதி வாய்ந்த ஊனத்தையும் கருத்தில் கொண்டு, காயம் அடைந்த மாடுபிடி வீரர்களுக்கும் காப்பீட்டு தொகை வழங்கும் வகையில் தாங்கள் தக்க மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் அது எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

மேலும் ஒவ்வொரு முறையும் காப்பீடு எடுப்பதற்கு பதிலாக ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பித்து கொள்ளும் வகையில் காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

அவர்கள் சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் காயம் அடைந்த நபர் ஒருவரை மூன்று சக்கர சைக்கிளில் அழைத்து வந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்